மாணவர்கள் தாக்கப்படுவதற்கெதிராக நிகழ்ந்த போரட்டம் பற்றிய விபரங்கள்

கிரி

கடந்த வெள்ளியன்று நடந்த தெகிவளை உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் கவனயீர்ப்பு பேரணியொன்றில் சிங்கள மாணவர்களும் மாணவியரும் பொலிசினால் கடுமையாக தாக்கப்பட்டனர். அவர்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குள் நுழைய முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டு பொலிஸ் தரப்பினால் வைக்கப்பட்டது. இதனையடுத்து 29 மாணவர்கள் சம்பவ இடத்தில கைது செய்யப்பட்டனர். 40 மாணவர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர். இதனையடுத்து நாடளாவிய ரீதியில் உயர் தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கண்டன ஊர்வலங்களை நடத்தியது.

இதைத் தொடர்ந்து 2ம்திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாண உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்களால் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இக்கற்கை நெறியானது பல்கலைக்கழக பட்டத்திற்கு சமமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

4 வருட ஆங்கில மொழி மூலமான உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா கற்கை நெறியானது 1990 ஆம் ஆண்டு அரசாங்க சுற்றறிக்கையில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக ஒன்றினால் வழங்கப்பட்ட பட்டத்திற்குச் சமன் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சுற்றிக்கையை மீள நடைமுறைப்படுத்த வேண்டும் என இன்றைய பேரணியில் மாணவர்கள் வலியுறுத்தினர். தமது கோரிக்கை நிறைவுபெறாத பட்சத்தில் எதிர்வரும் காலங்களில் போராட்டத்தை தொடர்வோம் எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தெகிவளை மாணவர்களின் கோரிக்கையான அவர்களின் முகாமைத்துவ டிப்ளோமாவை பட்டமாக்கும் செயல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.