ஜனாதிபதிகளின் பெயர்கள் மாறுவதால் மட்டும் மக்களுக்கு பலனில்லை. ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜெயசூரிய

வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிறிதுங்க ஜெயசூரியவின் செவ்வி இது. அவரது அரசியல் நிலைப்பாட்டின் சுருக்கத்தை இச்செவ்வியின் மூலம் அறிந்துகொள்ளலாம். இச்செவ்வியின் முழு விரிவாக்கத்தை ஆங்கிலத்தில் படிக்கவும்.

அவர் முன்வைக்கும் செயற்திட்டத்திற்கு தமிழ் சொலிடாறிற்றி முழு ஆதரவையும் வழங்குகிறது. தழிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பற்றி மற்ற எந்த வேட்பாளர்களும் ஒரு மூச்சுக்கூட விட தயாராக இல்லாத நிலையில் சிறிதுங்க பிரிந்துபோகும் உரிமை பற்றி இத்தேர்தலில் பகிரங்கமாக பேசி வருகிறார். அதற்கான பேச்சளவிலான ஆதரவு மட்டுமின்றி இந்த கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கான மேலதிக ஆதரவுகளையும் தமிழ் சொலிடாறிற்றி வழங்க முன்வந்துள்ளது. துண்டுப் பிரசுரம் மற்றும் மேலதிக பிரச்சார நடவடிக்கைகளுக்கான நிதி உதவி செய்ய முடிந்தவர்கள் தயவு செய்து உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

—-

மகிந்த ராஜபக்சவின் அரசினை எதிர்ப்பவர்கள் ஒண்றாக இணைந்து நின்று எதிர்ப் போட்டியாளரை ஆதாpப்பதன் மூலம் எப்படியாவது மகிந்த அரசு தோற்கடிக்கப்படவேண்டும் என்று பேசப்படுகிறது. நீங்களும் மகிந்த அரசைக் கடுமையாக எதிர்ப்பவர். நீங்கள் ஏன் இந்த ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறீர்கள் ?
சிறி: நாம் தற்போதய மகிந்த அரசைக் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த அரசை விழுத்துவதற்காக எல்லாவித நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். ஆனால் அதற்காக நாம் எந்த முதலாளித்துவக் கட்சிகளுடனும் சமரசம் செய்துகொள்ளத தயாராக இல்லை. இந்த கொடுங்கோலரசு நிச்சயமாக வீழ்த்தப்படவேண்டியதே. அதனாற்தான் இவ்வரசக்கு எதிராக மக்கள் திரட்சியை ஏற்படுத்த பாடுபட்டு வருகிறோம். இந்த அரசை தூக்கி எறிந்துவிட்டு அவ்விடத்தில் எதை வைத்து நிரப்புவது என்பது எமக்கு முக்கியமான கேள்வியாக இருக்கிறது. 1994ல் என்ன நடந்தது என்பது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். 17 வருட காலம் நாட்டைச் சூறையாடிய ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சியை விழுத்துவதற்காக எல்லோரும் எதிர் கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. எதிர் கட்சி வென்றபின் என்ன நடந்தது? 80 களில் அமுலுக்கு வந்த எந்த மக்கள் எதிர்ப்புச் சட்டம் பின்வாங்கப்பட்டது? அல்லது என்ன கொள்கைகள் மாற்றப்பட்டது? அதற்குப் பதிலாக மேலும் கொடிய யுத்த வெறி அரசு ஆட்சியை கைப்பிடித்ததுதான் நிகழ்ந்தது. ஒரு முதலாளித்துவ கட்சிக்கு இன்னொரு முதலாளித்து கட்சி மாற்றல்ல. அவர்கள் வேறு உடை போட்ட ஓரே மனிதர்கள்தான். எதிர் கட்சி எந்த மாற்றையும் முன்வைக்கவில்லை.
ஆட்சியில் இருப்பவர்கள் தூக்கி எறியப்பட்டதும் மக்கள் கோரிக்கைகளை முன்னெடுப்பது எவ்வாறு என்பதில் எம் கவணம் குவிந்திருக்கிறது. மயித்திரிபால வென்றாலும் மகிந்த ஆட்சியின் சட்டங்கள் திட்டங்கள்தான் தொடரப் போகிறது. இவர்கள் மக்களின் பிரதிநிதிகள் இல்லை. இவர்களை ஆதரிப்பதால் மக்களுக்கு எந்த லாபமும் இல்லை. மக்கள் தம் கோரிக்கைகளை முதன்மைப்படுத்தும் வேட்பாளருக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை வழங்கவே நான் இத்தேர்தலில் நிற்கிறேன்.
எத்தகைய மக்கள் நலன்சார் கோரிக்கைகளை நீங்கள் முன்னெடுக்கிறீர்கள்?
சிறி: நிறைவேற்று அதிகாரமுடய ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும். ஆனால் அதுமட்டும் போதாது. இச்சட்டம் மட்டுமில்லை இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் யாப்பும் மக்கள் நலனை முன்வைத்து இயங்குவதல்ல. தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் மற்றும் வறிய சிஙகளத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு இந்த யாப்பில் இடமில்லை. அதை ஒட்டுமொத்தமாக நாம் ரத்துச் செய்ய வேண்டும். எல்லாப் பகுதிகளிலும் இருந்து சரியான ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட சட்டவாக்க சபை உருவாக்கப்பட்டு மக்கள் தாம் எத்தகைய சமூகத்தில் வாழ விரும்புகிறார்கள் என அவர்களே தெரிவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். இச்சபை சரியான சட்டத்தை உருவாக்குதல் – மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளை வழங்குதல் முதலிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறைகளை தனியார் மயப்படுத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இலவச கல்வி மற்றும் இலவச சுகாதார வசதிகளை காப்பாற்றுவதுடன் அவற்றுக்கு மேலதிக நிதி ஓதுக்கீடு வழங்கப்படவேண்டும் எனவும் கோருகிறோம்.
இது தவிர அரச ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக போராடி வருவதை தெரிந்திருப்பீர்கள். பணவீக்கத்திற்கேற்ப சம்பள உயர்வு வழங்கப்படாமையால் பல தொழிலாளர்கள் வறுமையை நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் – பலர் வறுமையில் வாடுகிறார்கள். சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலை செய்பவர்களுக்கு மிக மோசமான குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. அதே சமயம் பாதுகாப்பு மற்றும் இராணுவ செலவுகளுக்காக ஏராளமான பணம் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலமை உடனடியாக மாற்றப்படவேண்டும். அரச சொத்து மக்கள் சேவைகளுக்காக செலவு செய்யப்படவேண்டுமேயன்றி மக்கள் உரிமைகளை முடக்குவதற்கு செலவு செய்யபபடக்கூடாது.
நீண்ட காலமாக தமிழ் பேசும் மக்கள் கடும் அடக்குமுறைகளை அனுபவித்து வருகிறார்கள். நானும் நானிருக்கும் கட்சியான சோசலிச கட்சியும் தமிழ் பேசும் மக்களின் முழுமையான சுயநிர்ணய உரிமையயை அங்கீகரிக்கிறோம். பிரிந்து போகும் உரிமை உட்பட்ட தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக போரடி வருகிறோம்.
சமீப காலமாக துவேசிகள் முஸ்லிம் மக்களளைத் தாக்கி வருவது உங்களுக்குத் தெரியும். துவேச பொது பல சேனாவை நாம் கடுமையாக எதிர்த்து வருகிறோம். இவர்கள் நடவடிக்கைகள் உடனடியாக முடக்கப்பட வேண்டும். முஸ்லிம் மக்களின் வாழ்வுரிமை மற்றும் மதம் சார் உரிமைகள் தக்க முறையில் மதிக்கப்படவேண்டும்.
இது போல் பல கோரிக்கைகளை முன்வைக்கிறோம். ஆனால் இக்கோரிக்கைகளை வெற்றுக் கோசங்களாக மட்டும் நாம் முன்வைக்கவில்லை. மாறாக இக்கோரிக்கைகளின் பின்னால் மக்கள் திரள வேண்டும் எனப் பிரச்சாரம் செய்து வருகிறோம். இக்கோரிக்கைகளை நாம் அடைவதானால் மக்கள் திரட்சி தேர்தலுக்கு அப்பாலும் தொடர வேண்டும் என்பதில் நாம் தெளிவாயிருக்கிறோம். முதலாளித்துவ கட்சிகளின் போதாமையை உணர்ந்து சோசலிச மாற்றுப் பொருளாதார சமூக முறைக்காக மக்கள் போராட முன்வரவேண்டும்.
இலங்கையில் இயங்கிவரும் மற்ற இடதுசாரிகள் என்ன சொல்கிறார்கள் எனச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?
சிறி: அனைத்து இடதுசாரிகளும் ஒண்றிணைந்து தமது பலமான எதிர்ப்பை காட்ட வேண்டும் என நாம் விரும்பினோம். ஆனால் அது சாத்தியப்பட்டு வரவில்லை. சம சமாஜ கட்சி முதலாலித்து கட்சியுடன் கூட்டுச் சேருவதை எதிர்த்து வெளிவந்து புதிய கட்சி கட்டிய விக்கிரமபாகு கருணாரத்தின போன்றவர்கள் கூட இன்று ஜக்கிய தேசிய கட்சியின் பேச்சாளர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள்.
பழய சம சமாஜ கட்சியும் கம்யூனிச கட்சியும் கேவலமான முறையில் இன்னும் கொடிய அரசுடன் வேலை செய்து வருகிறார்கள்.
எதிர்ப்பதாக பாவனை செய்யும் ஜே.வி.பி தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசத் தயாரில்லை. ஜே.வி.பி யின் இனவாதத்தைத் தாங்க முடியாமல் உடைத்துக்கொண்டு வெளியேறிய தோழர்கள் கூட தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை பகிரங்கமாக முன்னெடுக்க தயங்குகிறார்கள்.
இந்நிலையில்தான் நாம் தனித்து நின்று இக்கோரிக்கைகளை முன்னெடுக்கவேண்டியதாயிற்று.
உங்களுக்கு இத்தேர்தலில் ஆதரவு எப்படியிருக்கும் என எதிர் பார்க்றீர்கள்? நீங்கள் தனித்துப் போட்டியிடுவதால் மகிந்தவுக்கு எதிரான வாக்கு உடைபடும் சாத்தியமுண்டா? மக்கள் உங்களுக்கேன் வாக்களிக்க வேண்டும் எனச் சொல்வீர்களா?
சிறி: மகிந்த தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இன்னுமொருமுறை அவர்கள் வென்றால் என்ன என்ன புதிய பூதங்கள் கிழம்புமோ என பலர் இன்று பயப்படுகின்றனர். ஏராளமான மக்கள் மகிந்த அரசின் கொடுமைத்தன்மையை உணரத் தொடங்கியிருக்கின்றனர். தமது உரிமைக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையுடன்தான் மக்கள் மகிந்தவை எதிர்கிறார்கள். ஆனால் மக்கள் கோரிக்கைகளை மயித்திரி நிறைவேற்றவா போகிறார்? பெரும்பான்மை மக்களுக்கு அந்த நம்பிக்கையில்லை. மக்களுக்கான மாற்று சந்தர்ப்பத்தை வழங்கத்தான் நாம் இத்தேர்தலில் நிற்கிறோம்.
தமிழ் பேசும் மக்கள் யாருக்கு வாக்களிக்க முடியும் என நினைக்கிறீர்கள். தமது குரல்வளையை நெருக்கிக்கொண்டிருக்கும் வேட்பாளர்களுக்கு தமிழ் மக்களை வாக்குப் போடச் சொல்லி யாரும் கேட்கக்கூடாது. அவர்கள் தமது எதிர்ப்பை கொள்கை ரீதியாக பதிவு செய்யவிரும்பின் எமக்கு வாக்களிப்பதன் முலம் அதைப் பதிவு செய்ய முடியும். சிறுதொகையானாலும் இந்த எதிர்ப்பை பதிவது மிக முக்கியமானது.
இத் தேர்தலை கணித முறையில் நாம் பார்க்காமல் மக்கள் எதிர்ப்புச் சக்தியை திரட்டுவது எவ்வாறு என்ற அடிப்படையில் நாம் அணுகுகிறோம். மக்கள் எதிர்ப்பு தேர்தலின் பின்பும் தொடர வேண்டும். அதனாற்தான் மக்கள் தம் எதிர்ப்பை எம்முடன் பதிய வேண்டும் எனக் கோருகிறோம்.
கடந்த வட மாகானத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். அது தொடர வேண்டும். ஜனாதிபதிகளின் பெயர்கள் மாறுவதால் மட்டும் மக்களுக்கு பலனில்லை. கொள்கை மாற வேண்டும். அரசியல் யாப்பு தூக்கி எறியப்பட வேண்டும். இந்த அர்த்தத்தில் எதிர்ப்பவர்கள் தமது எதிர்ப்புக் குரலை எம்முடன் பதிய வேண்டும். இத்தனை பேர் அனைத்து இனவாதிகளையும் எதிர்த்து வாக்களித்தனர் என்பது வரலாற்றில் பதியப்படவேண்டும்.
எமக்கு வாக்களித்து எதிர்ப்புக்குரலை பதிவதோடு மட்டும் நிறுத்திவிடாதீர்கள். தேர்தலுக்கு அப்பாலும் இக்கொள்கைகளுக்காக போராட நீங்கள் திரண்டு வரவேண்டும். எம்முடன் இணைந்து அதற்கான செயற்திட்டங்களில் பங்களிக்க வேண்டும் என வேண்டுகிறோம். அத்தகைய அரசியல் நடவடிக்கையின்றி எமது உரிமைகளை நாம் வென்றெடுத்துவிட முடியாது.
எனக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரான வாக்காக வரலாற்றில் பதியப்படும். சரியான கோரிக்கைகளுக்கான வாக்காக பதியப்படும். அடிப்படை மாற்றத்தைக் கோரிய வாக்குகளாக அவை பதியப்படும். இந்த வரலாறு மக்கள் திரட்சிக்காகவும் சமூக மாற்றத்துக்காகவும் போரடுபவர்களுக்கு மேலதிக ஊக்கத்தையும் பலத்தையும் கொடுக்கும் என்பதில் ஜயமில்லை.
தயவு செய்து அனைத்து அடக்கு முறைகளுக்கும் எதிராக வாக்களியுங்கள். உங்கள் எதிர்ப்பை வரலாற்றில் பதியுங்கள். உரிமைகளுக்கான போராட்டத்தை தொடர இணைந்து வாருங்கள்.