யாரிந்த சிறிதுங்க?

மகிந்தவுக்கும் மயித்திரிக்கும் இடையில் நடக்கும் அடுத்த மன்னர் யார் என்ற போட்டியில் மக்களின் கோரிக்கைகள் நசுங்கிச் செத்துக்கொண்டிருக்கிறது. நிறைவேற்று அதிகாரத்தை வழங்கிய கையோடு மக்கள் மீட்சி பெற்றுவிடுவார்கள் என்ற போலி நம்பிக்கையில் எதிர்கட்சி பக்கம் திரண்டவர்களும்கூட இன்று தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். மயித்திரியின் சிந்தனையும் மகிந்த சிந்தனையாகவே இருக்கிறது.

தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை யாராவது கதைத்தால் அது மகிந்தவைப் பலப்படுத்திவிடும் என்ற பயக்காட்டுதலை செய்து உரிமைக் கோரிக்கைகள் நசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதையும் மீறி ஒருவர் தனித்து நிற்கிறார். மயித்திரி மகிந்த என்று பல பெயர்களில் போட்டியிடும் அனைத்து சிங்க பௌத்த இனவாதிகளையும் எதிர்த்து நிற்கிறார் அவர்.

அது மட்டுமின்ற யாரும் பேச மறுக்கும் அல்லது பேசப் பயப்படும் கோரிக்கைகளை பகிரங்கமாக முன்வைத்து போட்டியிடுகிறார். பிரிந்துபோகும் உரிமை உடம்பட தமிழ் மக்களின் சுய நிர்ணய கோரிக்கையை கோரிப் போட்டியிடுகிறார். வடக்கு கிழக்கில் இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்கிறார். அரசியற் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யயப்பட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்கிறார். யுத்தக்குற்ற அரசு கூண்டில் ஏற்றப்பட வேண்டும் என்கிறார். நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தால் மட்டும் போதாது அரசியல் சட்ட யாப்பையே ஒட்டுமொத்தமாக முடிவுக்கு கொண்டு வந்து அனைத்து மக்களின் உரிமைகளையும் உள்வாங்கும் அரசியலமைப்பு மக்களால் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார். தேர்தல் சமயத்தில் மட்டும் எதிர்ப்பு பாவனை செய்யாது தேர்தலுக்கும் அப்பால் அரச எதிர்ப்பு மக்கள் திரட்சியைச் செய்யும்படி மக்களைத் தூண்டி வருகிறார்.

அவர் பெயர் சிறிதுங்க ஜெயசூரிய.

இலங்கைக்குள் பலருக்கும் அவரைத் தெரியும். ஆனால் புதிய தலைமுறையினர் பலருக்கு இது ஒரு புதினமான விசயமாக இருக்கிறது. எப்படி ஒரு சிங்கள இனத்தை சேர்ந்தவர் தமிழ் தலைமகள் கூட முன்வைக்கத் தயங்கும் கோரிக்கைகளைத் துணிந்து வைத்து போராடி வருகிறார் எனக் கேட்கிறார்கள். அதனாற்தான் இங்கு நாமும் அந்தக் கேள்வியைக் கேட்கிறோம். யாரிந்த சிறிதுங்க ?

ஒரு வறிய இடதுசாரிக் குடும்பத்தில் பிறந்த சிறிதுங்க 1964 ல் இலங்கை சம சமாஜ கட்சியில் இணைந்து கொண்டார். ஒரு மொழி இரண்டு நாடு இரண்டு மொழிகள் ஒரு நாடு என வீர வேசமாக சம சமாஜ கட்சித் தலைவர்கள் பேசித்திரிந்த காலத்தில் – சம சமாஜிகள் மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கை பெற்றிருந்த காலத்தில் இவர் கட்சி வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு பலரதும் கவணத்தை பெற்றவர். ஆனால் இவர் கட்சியில் இணைந்த அதே காலப் பகுதிகளில் கட்சித் தலைமை தங்கள் புரட்சிகர கோரிக்கைகள் – தமிழ் பேசும் மக்களின் மொழி மற்றும் தேசிய உரிமைகளை முதலாளித்துவ கட்சிக்கு விற்கத் தொடங்கியிருந்தன. இதற்கெதிராக கட்சிக்குள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கினார் சிறிதுங்க. 1972ம் ஆண்டு புதிய சட்ட யாப்பு தமிழ் மக்களின் உரிமைகளைப் புதைத்த பொழுது கட்சிக்குள் கடும் போராட்டத்தை நடத்தி கட்சியை விட்டு வெயியேற நிர்பந்திக்கப் பட்டார்.

சமசமாஜ கட்சியின் இந்த வங்கிறோத்தின் பலனாக கொடிய ஜே. ஆர் ஜெயவர்த்தன ஆட்சியைப் பிடித்து நிலை ஏற்பட்டது. ஜே. ஆருக்கு எதிராக 1975ல் கொழும்பு தெற்கு தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் இவர் போட்டியிட்டார். ஆட்சிக்கு வந்த ஜே.ஆர் பின்பு தன் வசதிக்கேற்ப சட்டத்தை மாற்றியதையும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அமுல் படுத்தியதும் – மக்கள் விரோத கொள்கைகளைக் கடைப்பிடித்தமையும் – தமிழ் மக்கள் மீது அவர் கட்டவிழ்த்து விட்ட காட்டுத்தன தாக்குதல்களும் அனைவரும் அறிந்ததே.

கட்சிக்கு வெளியில் வந்த சிறி புதிய மாற்றுப் போராட்ட அமைப்பை உருவாக்க கடுமையாக உழைத்து மற்றய தோழர்களுடன் புதிய சம சமாஜ கட்சியை உருவாக்கினார். இக்கட்சியின் மூலம் பல்வேறு போராட்டங்களை அவர் முன்னெடுத்தார். 1980ம் ஆண்டில் நடந்த வேலை நிறுத்த போராட்டம் குறிப்பிடத் தக்கது. 1983ம் ஆண்டு கலவரத்தின் போது கொழும்பில் பல தமிழ் குடும்பங்களை இவர் தனிப்பட்ட முறையில் காப்பாற்றியிருக்கிறார். தமிழ் இளைஞர்கள் ஆயத போராட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தருனத்தில் கூட்டணித் தமிழ் தலைமைகளின் போதாமைகளை அம்பலப்படுத்தியதில் சிறியின் பங்கு முக்கியமானது.

ஜ.தே. கட்சி திட்ட மிட்ட முறையில் இடதுசாரிகளையும் தொழிற் சங்க வாதிகளையும் போட்டுத் தாக்கிய கால கட்டத்தில் சிறிதுங்க மேலும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. 1987 களில் தமிழ் மக்களைக் காப்பாற்றுகிறோம் எனச் சொல்லிக்கொண்டு வந்திறங்கிய இந்திய இராணுவம் பல ஏமாற்று கதைகளைக் கதைத்த போது அதற்கு பலர் எடுபட்டனர். புதிய சம சமாஜ கட்சிக்குள்ளும் இக்கதைகள் செல்வாக்குச் செலுத்தியது. விக்கிரமபாகு கருணாரத்தின போண்றவர்கள் இந்திய இராணும் தமிழ் மக்களுக்கு ஏதோ உரிமைகளை வென்றெடுத்துக் குடுத்துவிடப் போகிறது என நம்பினார். இந்திய அரசின் உண்மை நோக்கம் பற்றிய அரசியற் தெளிவின்றி இயங்கியவர்களுக்கு எதிராக மீண்டும் கட்சிக்குள் கடுமையான போராட்டத்தை சிறிதுங்க முன்னெடுக்க வேண்டியிருந்தது. அதே சமயம் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தெற்கில் இயங்கிய இடது சாரிகளை சிங்களப் புலிகள் எனத் திட்டி அரசும் ஜே.வி.பியினரும் வேட்டையாடத் தொடங்கினர். பல தோழர்களின் உயிரைப் பறி கொடுத்த சிறி இந்தியாவுக்கு தப்பி ஓடவேண்டியதாயிற்று. அங்கு தமிழ் பெயரில் தனது இடதுசாரிய வேலைகளை அவர் தொடர்ந்தார். சிறி எதிர்பார்த்தது போலவே இந்திய இராணுவம் தனது உண்மை முகத்தை காட்டியது. அவர்கள் தமது தேவைகள் நிறைவேறியதும் தமிழ் மக்களை நிர்கதியாக்கினர். சிறி மீண்டும் கட்சியில் இருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டார். மீண்டும் அவர் ஜக்கிய சோசலிச கட்சி என்ற பெயரில் புதிய அமைப்பைக் கட்ட கடுமையாக உழைத்தார்.

2005ல் மகிந்த தேர்தில் நின்ற பொழுது அதைக் கடுமையாக எதிர்த்து தேர்தலில் நின்றார் சிறி. மகிந்தவின் உருவில் சிங்கள இனத்துவேசம் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது – அவரை எதிர்த்து வாக்களியுங்கள் – அனைத்து முதலாளிததுவ வேட்பாளர்களையும் எதிருங்கள் என்ற கோரிக்கையுடன் நின்ற சிறி ஏறத்தாள 35 000 வாக்குகளைப் பெற்று மூண்றாவதாக வந்தார். தேர்தலுக்குப் பின் வேட்பாளர்கள் வழங்கிய பேச்சின் பொழுது இனத்துவசேத்தை கடடவிழ்த்து விட வேண்டாம் என்ற கோரிக்கையை முதன்மைப் படுத்தினார். இருப்பினும் அவர் பயந்தது போலவே நிகழ்ந்தது. தமிழ் மக்கள் படுகொலையைச் சந்திக்க நேர்ந்தது.

2008 பிற்பகுதியில் கடுமையாகிய யுத்தத்துக்கு எதிராக கடுமையான யுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளை அவர் ஒழுங்கு படுத்தினார். தமிழ் நாட்டுக்கு சென்ற அவர் தமிழ் மக்கள் திரண்டு இந்த யுத்தத்தை நிறுத்த வேண்டும் என அங்கிருந்த அனைத்து ஊடகங்களிலும் கோரிக்கையை முன்வைத்தார். அது மட்டுமின்றி தமிழ் மக்கள் படுகொலையை நிறுத்து என்ற பெயரில் ஒரு சர்வேதச போரட்ட அமைப்பை பல தமிழ் இளைஞர்கள் மற்றும் பல போராட்ட அமைப்புக்களுடன் சேர்ந்து உருவாக்குவதில் முக்கிய பங்களித்தார். இந்த அமைப்பே தமிழ் சொலிடாறிற்றி என்ற பெயருடன் இன்று இயங்கிவருகிறது. முதன் முதலாக லயோல கல்லூரியில் மாபெரும் மாணவர் கூட்டத்தினை ஒழுங்குபடுத்தி பேசினார். அக்கூட்டத்திற்காக புகழ் பெற்ற அருந்ததி ராய் எழுதிய கட்டுரை அண்று உலகெங்கும் வெளியானது.

கோர யுத்த முடிவுக்குப் பிறகு கொடிய அரசுக் கெதிரான கடும் போராட்டங்களை அவர் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். மனோ கனேசனுடன் சேர்ந்து கானாமற் போனவர்கள் பற்றிய விசாரனை செய்யும் அமைப்பை உருவாக்கி இயங்கியது – காணிப் பறிப்புக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பது வரை பல் வேறு போராட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறார் அவர்.

துவேச அமைப்பான பொது பல சேனா என்ற அமைப்புக்கு எதிராக முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காக கடுமையான போராட்டங்களைச் செய்து வருகிறார். அவர் பொதுச் செயலாளராக இருக்கும் சோசலிச கட்சியின் தோழர்கள் பொது பல சேனாவுக்கு எதிராக ஒரு மோடார் சைக்கிள் பேரனியை ஒழுங்கமைதத்திருந்ததையும் அதை துவேசி பிக்குகள் கடுமையாக தாக்கியதையும் செய்தியிற் பார்த்திருப்பீர்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்துக்காக தன் வாழ்க்கையை அர்பணித்தவர் சிறிதுங்க ஜெயசூரிய. தனது அரசியல் நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். தமிழ் பேசும் மக்களின் தேசிய உரிமை உட்பட அனைத்து உரிமைகளுக்காகவும் அவர் எந்த தடுமாற்றமும் இன்றி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இது தான் சிறிதுங்கவின் மிகச் சுருக்கமான வரலாறு. இன்று தேர்தலில் அவர் முன்வைக்கும் போரிக்கைகள் புதியவை அல்ல. அவற்றுக்காக அவர் நீண்டகாலமாகப் போராடி வருபவர். அடுத்த தலைமுறையும் அவேராடு இணைந்து தங்கள் எதிர்ப்பை கட்ட முன்வரவேண்டும். மக்கள் திரட்சி எதிர்ப்புக் கட்டப்படாமல் மக்கள் உரிமைகளை வென்றெடுக்க முடியாது என்பதை சிறியின் வாழ்க்கை விளக்கி நிற்கிறது.